இந்தியா

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!!

Malaimurasu Seithigal TV

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசா்வ் வங்கி 2-வது முறையாக அறிவித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் மீண்டும் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

இதையடுத்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டைகளும் இன்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இயலாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனே தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே நோட்டுகளையும் மாற்றிக்கொள்ளும் காலக்கெடுவை அக்டோபா் 7-ம் தேதி வரை நீட்டித்து  2-வது முறையாக அறிவித்தது. இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

இதற்கிடையே மும்பையில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  96 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா்.