இந்தியா

காவிரி: தண்ணீர் திறக்க கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனு தாக்கல்!

Malaimurasu Seithigal TV

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனு தாக்கல் செய்யவுள்ளது. 

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. இதன் காரணமாக தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது கர்நாடக அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியதால், தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தொிவித்திருந்தார்.

இதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது.