பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், மன் கி பாத் எனப்படும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் 100 கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : CAG அறிக்கை மூலம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தமிழக முதல்வர் அறிவிப்பார்..! - மா.சுப்ரமணியம்
அதன் ஒருபகுதியாக மும்மையிலுள்ள கேட்வே ஆஃப் இந்தியா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை, உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை எனவும், இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ’மனதின் குரல்’ ஒரு மாதாந்திர தேசிய பாரம்பரியமாக மாறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க கோடிக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது பகுதி ஐ.நா. தலைமையகத்தில் நேரலை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, நியூயார்க்கில் அதிகாலை 1.30 மணிக்கு ஒலிபரப்பாகும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.