குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகமதாபாத்தில் ஆளுனர் மாளிகையில், தனது தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனரிடம் அவர் வழங்கினார். பாஜக-வை சேர்ந்த விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்கு பிறகு முதலமைச்சரானார். 65 வயதான விஜய் ரூபானி, 2016 ஆம் ஆண்டு முதல், குஜராத் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், காந்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை முதலமைச்சர் நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல், பாஜக எம்எல்.ஏ.க்களும் அங்கு ஒன்று சேர்ந்தனர். குஜராத் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்க எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதன் பிறகு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.