புனிதமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியது நமது அதிர்ஷ்டம் என்றும் இந்த அவை எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் இந்த செங்கோல் நம்மை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் மக்களவையில் திறப்பு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை, மாநிலங்கவை சபாநாயகர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மாநிலங்கவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்த நவீன நாடாளுமன்ற கட்டடம் இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட்டதில் பெரு மகிழ்ச்சி என்று கூறினார். மேலும், தற்போதைய அமிர்த காலத்தில் இந்த நாள் ஒரு மைல்கல் என்றும் கூறினார்.
இதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றம் குறித்தும் செங்கோல் குறித்தும் தயாரிக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது.
இதையும் படிக்க : நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!
தொடர்ந்து பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, தற்போதைய அமிர்த காலத்தில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறினார். நமது நாடாளுமன்றம் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறன் வாய்ந்தது என்றும், நமது நாடாளுமன்றத்தின் நல்ல தத்துவங்களை நாம் அவசியம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தையும் நினைவு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் பேசிய பிரதமர், புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாகத் திகழும் என்று கூறினார். சோழப் பேரரசில் நீதி, நல்லாட்சி மற்றும் நீதியின் அடையாளமாக விளங்கிய தமிழ்நாட்டின் செங்கோல், கடமையின் பாதையில் நாம் அனைவரும் செல்ல வேண்டும் என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது சிறப்பு என்று கூறினார்.
உலக ஜனநாயகத்தின் அடித்தளமாக, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்ந்து வருவதாகக் கூறிய பிரதமர், இந்தியா முன்னோக்கி நகர்ந்தால் உலகமும் முன்னோக்கி நகரும் என்று கூறிய பிரதமர், இந்த புதிய நாடாளுமன்ற உலகின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அதிமுகவின் சிவிசண்முகம், தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.