இந்தியா

நீதிமன்ற அமர்வுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி...உத்தரவால் பணிசுமை குறையுமா?!!

Malaimurasu Seithigal TV

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் 10 திருமண வழக்குகள் மற்றும் 10 ஜாமீன் மனுக்களை தினமும் விசாரிக்க அனைத்து அமர்வுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியின் முக்கிய முடிவு:

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  முழு நீதிமன்றக் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இதன் கீழ், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தினசரி 10 திருமண வழக்குகளையும், 10 ஜாமீன் மனுக்களையும் விசாரிக்க அனைத்து நீதிமன்ற அமர்வுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் தலைமை நீதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

பணிச்சுமை குறையும்: 

திருமண விவகாரங்கள் தொடர்பான 3,000 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.  ஒவ்வொரு அமர்வும் ஒரு நாளைக்கு 10 இடமாற்ற வழக்குகளை விசாரித்தால், 13 அமர்வுகள் ஒரு நாளைக்கு 130 வழக்குகளையும், வாரத்திற்கு 650 வழக்குகளையும் தீர்க்க முடியும் என்றும் அமர்வு கூறியது. இதனால் பணிச்சுமை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளது உச்சநீதிமன்ற அமர்வு.

நள்ளிரவு வரை வழக்குக் கோப்புகளை விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நீதிபதிகளின் சுமையை குறைக்க துணைப் பட்டியலில் கடைசி நிமிட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

-நப்பசலையார்