இந்தியா

"மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க" வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அண்மையில், வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள், தமிழ் நாட்டு மீனவர்களை தாக்கிவிட்டு, அவர்களின் பொருட்களையும், மீன்பிடி வலைகளையும் கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த கோர சம்பவத்திற்கு, பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, " தொடரும் தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையின் தாக்குதலால் மீன்வர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதோடு, அவர்களது பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.