இந்தியா

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் நிலையும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும்.....

Malaimurasu Seithigal TV

உலகளாவிய பசி குறியீடு 2022 வெளியிடப்பட்டுள்ள நிலையில் 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தைப் பிடித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

உலகளாவிய பசி குறியீடு:

உலகளாவிய பசி குறியீடு 2022 இல் இந்தியாவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தரவுகளின்படி, 121 நாடுகளில் இந்தியா இப்போது 6 இடங்கள் சரிந்து 107 வது இடத்திற்கு பிந்தங்கியுள்ளது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் போரினால் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானை விட மட்டுமே இந்தியாவின் நிலை சற்று சிறப்பாக உள்ளது. 29.1 புள்ளிகளுடன், உலகளாவிய பசி குறியீட்டின் வெளியீட்டாளர்கள் இந்தியாவில் 'பட்டினி' நிலைமையை தீவிரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்டை நாடுகளுடன்...:

அண்டை நாடுகளைப் பற்றி பேசினால், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளின் நிலைமை நம்மை விட சிறப்பாக உள்ளது.

121 நாடுகள் அடங்கிய பட்டியலில், பாகிஸ்தான் 99வது இடத்திலும், இலங்கை 64வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும், நேபாளம் 81வது இடத்திலும், மியான்மர் 71வது இடத்திலும் உள்ளன. 

இந்தியாவை விட...:

ஜாம்பியா, ஆப்கானிஸ்தான், திமோர்-லெஸ்டே, கினியா-பிசாவ், சியரா லியோன், லெசோதோ, லைபீரியா, நைஜர், ஹைட்டி, சாட், டேம் காங்கோ, மடகாஸ்கர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் நிலைமை இந்தியாவை விட மோசமாக உள்ளது. 

அளவிட முடியாதவை:

கினியா, மொசாம்பிக், உகாண்டா, ஜிம்பாப்வே, புருண்டி, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தரவரிசையை நிர்ணயிக்க முடியவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

உலகளாவிய பசி குறியீடு வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.

காங்கிரஸ்:
 
உலகளாவிய பசி குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளிவந்த பிறகு, எதிர்க்கட்சிகள் மத்திய அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன. மோடி அரசின் 8 ஆண்டுகளிலும் இந்தியாவின் தரவரிசை தொடர்ந்து சரிந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.   சிதம்பரம் அவரது ட்விட்டர் பதிவில், ”இந்துத்துவா, இந்தி திணிப்பு, வெறுப்பை பரப்புவது பசிக்கு மருந்து அல்ல.” என பதிவிட்டுள்ளார்.  

மேலும் ”இது தவிர, இந்த புள்ளிவிவரங்களை பாஜக அரசு நிராகரித்து அதைக் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பினரை அமலாக்க துறை உதவியுடன் ரெய்டு மட்டுமே செய்யும்” என்று கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி:

இந்த புள்ளி விவரங்கள் வெளியானதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் அரசை கடுமையாக தாக்கியுள்ளார். ”இந்தியாவை ஐந்து டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவது பற்றி பாஜக பேசுகிறது.  ஆனால் 106 நாடுகள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை வழங்குவதில் நம்மை விட சிறந்து விளங்குகின்றன. மேலும், இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி கொடுக்காமல் நம்பர்-1 ஆக முடியாது” என்று கூறியுள்ளார்.

                                                                                       -நப்பசலையார்