இந்தியா

2021யை விட 2022ல்...பயணிகளின் போக்குவரத்தை இரட்டிப்பு...தெற்கு ரயில்வே கூறியது என்ன...?

Tamil Selvi Selvakumar

தெற்கு ரயில்வே கடந்த 2022 ல் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான பயணிகளின் எண்ணிக்கையானது, கடந்த 2021-ன் பயணிகளின் எண்ணிக்கையை விட இரட்டிப்பாக்கியுள்ளது. 

2022 யையும் 2021 யையும் ஒப்பிட்ட தெற்கு ரயில்வே:

தெற்கு ரயில்வே கடந்த 2022 ல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், கடந்த 2022 ல் ஏபரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 468 மில்லியன் பயணிகளை ஏற்றிக்கொண்டு 4,689.46 கோடி ரூபாய் என்ற அளவில் வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 225 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். எனவே, கடந்த 2021 ஐ ஒப்பிடும் போது கடந்த 2022 ல் தெற்கு ரயில்வே பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.

எப்படி சாத்தியமானது:

தெற்கு ரயில்வே பயணிகள் போக்குவரத்து வாரியத்தின் இலக்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு 12.4 % தாண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத, பயணிகள் ரயில்கள், பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது ஆகியவற்றின் மூலமே பயணிகளின் போக்குவரத்தை அதிகரிக்க உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

டிசம்பரில் மட்டும் இவ்வளவு சதவீதம் அதிகரிப்பா?:

அதன்படி, கடந்த 2021 டிசம்பரில் 40 மில்லியன் பயணிகள் மட்டும் பதிவாகி இருந்த நிலையில், கடந்த 2022 டிசம்பரில் 55 மில்லியன் பயணிகள் எண்ணிக்கை பதிவாகியிருந்தது. வெறும் டிசம்பரை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும் போது கடந்த 2022 ல் 37.4% அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 2021 ஐ காட்டிலும், 2022 ல் பயணிகளின் போக்குவரத்தை தெற்கு ரயில்வே இரட்டிப்பாக்கியுள்ளது.

அதிகரித்தது சரக்கு போக்குவரத்து :

அதேபோல், தெற்கு ரயில்வேவின் சரக்கு போக்குவரத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே ஏப்ரல் - டிசம்பர் காலக்கட்டத்தில் 22 மில்லியன் டன்களாக இருந்த நிலையில், 1,989.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிருந்தது. ஆனால், அதே காலக்கட்டத்தில் கடந்த 2022 ஏப்ரல் - டிசம்பரில் 27 மில்லியன் டன்களாக அதிகரித்த நிலையில், 2,659.73 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சாத்தியமானது எப்படி?:

அதிகரித்த சரக்கு போக்குவரத்து நிலக்கரி (13.115 மில்லியன் டன்), உணவு தானியங்கள் (2.198 மெட்ரிக் டன்), உரங்கள் (3.031 மெட்ரிக் டன்) மற்றும் பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் பொருட்கள் (3.812 மெட்ரிக் டன்) ஆகியவற்றால் இந்த தெற்கு ரயில்வே சரக்கு போக்குவரத்து அதிகரித்ததாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.