இந்தியா

எம்.எல்.ஏக்கள் மீது இத்தனை பணமோசடி வழக்குகளா...விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

Malaimurasu Seithigal TV

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 71 எம்எல்ஏக்கள் பணமோசடிச் சட்டம், 2002 இன் கீழ் பணமோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநல மனு:

எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என , வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அஸ்வினி உபாத்யாய் மனு மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விஜய் ஹன்சாரியா அறிக்கை:

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கை பின்வருமாறு.

51 முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள் பணமோசடி சட்டத்தில் அமலாக்க இயக்குனரகத்தால்  வழக்குகளை எதிர்கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை கூறுகிறது.  எனினும், அவர்களில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது தனித்தனியாக குறிப்பிடப்படவில்லை. 

71 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பணமோசடி சட்டம் 2002 இன் கீழ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.  முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பதிவு செய்த 121 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. 

நிலுவை வழக்குகள்:

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில்உள்ள கிரிமினல் வழக்குகளை தொடர்ந்து கண்காணித்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் பல ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும், மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

-நப்பசலையார்