இந்தியா

கணவனின் பாதையை தான் மனைவியும் பின்பற்ற வேண்டுமா?!!

Malaimurasu Seithigal TV

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் முகமாகவும், அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருந்தவர் கேப்டன் அம்ரீந்தர் சிங். கடந்த 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவின் அருண் ஜெட்லிக்கு எதிராக போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 2015ல் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர்  கடந்த 2017ல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை இவர் தலைமையில் சந்தித்தது. அதிலும் அபார வெற்றி பெற்றது.

முதலமைச்சர் - பதவி விலகல்:

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் பொறுப்பேற்று செயல்பல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், நாவ்ஜோத் சிங்கிற்கும் அம்ரீந்தருக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வந்தது. கட்சியின் மாநிலத் தலைவராக நாவ்ஜோத் சிங்கை காங்கிரஸ் கட்சி நியமித்ததை அடுத்து, அம்ரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். 

அம்ரீந்தர் குடும்பம்:

கேப்டன் அமரீந்தர் சிங் தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை பாஜகவுடன் இணைத்ததன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துள்ளார்.  அவருடன் பாஜகவில் இணைந்த குடும்ப உறுப்பினர்களில் மகன் ரந்தீர் சிங், மகள் ஜெய் இந்தர் கவுர் மற்றும் பேரன் நிர்வான் சிங் ஆகியோரும் அடங்குவர். 

”என் வழி தனி வழி”- பிரனீத் கவுர்:

அம்ரீந்தர் சிங்கின் குடும்பத்தினர் அனைவரும் பாஜகவில் இணைந்த நிலையில் பாட்டியாலாவின் எம்பியும், அம்ரீந்தரின் மனைவியுமான பிரனீத் கவுர் காங்கிரஸில் இருந்து விலக ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.  மனைவி ப்ரீனீத் கவுர் ஏன் அவருடன் பாஜகவில் சேரவில்லை என்ற கேள்விக்கு, ”கணவன் எங்கு சென்றாலும் மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கேப்டன் அமரீந்தர் சிங் பதிலளித்துள்ளார். 

அரசியல் காரணம்:

பிரனீத் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை என்று பாஜக தலைவர் ஒருவர் காரணம் கூறியுள்ளார். ப்ரனீத் எம்பி பதவியை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும் நிலை ஏற்படும்  என்றும், அதில் ஆம் ஆத்மி ஆதாயம் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ்ஸும் கூட அவரை ராஜினாமா செய்யக் கேட்காததற்கு இதுவே காரணம் என்றும் கூறியுள்ளார் பாஜக தலைவர்.

அம்ரீந்தரை விமர்சித்த ஆல்வா:

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்த மார்கரெட் ஆல்வா, கேப்டனை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். ”பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சரை விட அவரது மனைவி புத்திசாலி” என்று கூறியுள்ளார். கேப்டன் பாஜகவில் இணைந்ததால் மத்திய அரசின் அனைத்து புலனாய்வு துறைகளின் சோதனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர் என காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கேப்டனும் கூட்டணிகளும்:

இருப்பினும், கேப்டன் சொந்தக் கட்சியை உருவாக்கி, பின்னர் அதை வேறு கட்சியில் இணைப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக, அவர் தனது கட்சியான சிரோமணி அகாலி தளத்தை (பந்தக்) காங்கிரசுடன் இணைத்தார். இச்சம்பவம் 1998ஆம் ஆண்டில் நடந்தது.  இவரின் தற்போதைய முடிவு பாஜகவுக்கு மிகவும் சாதகமாக அமையும். பஞ்சாப் சார்பில் சீக்கிய தலைவர்கள் யாரும் ஒருவர் கூட பாஜகவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.கே.ஆண்டனி மீது கேப்டன் குற்றச்சாட்டு:

பாஜகவில் இணைந்த பிறகு, அமரீந்தர் சிங் தனது பழைய கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏ.கே.அந்தோணியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ஆயுதங்கள் வாங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஆயுதங்களை வாங்கியிருந்தால், இன்று சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா சிறந்த நிலையில் இருந்திருக்கும் எனவும் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸின் தவறுகளை பிரதமர் மோடி தற்போது திருத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார் கேப்டன்.