புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் 7ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ரங்கசாமிக்கு கொரோனா தொற்று, அமைச்சரவை பங்கீட்டில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வந்த இழுபறி ஆகியவற்றின் காரணமாக தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அமைச்சரவை பதவியேற்காத நிலை உருவானது. இதனையடுத்து இரு கட்சிக்கும் இடையே அமைச்சரவை பங்கீடு மற்றும் இலாகா ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை நேரில் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சரவை பட்டியலை அளித்தார்.
அந்த பட்டியலில் பாஜகவிற்கு 2 அமைச்சர்களும், என்.ஆர்காங்கிரசுக்கு 3 அமைச்சர்களும் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனையடுத்து நாளைய தினம் அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.