காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவா் இந்திய மக்களின் பணத்தை ஏமாற்றி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி,.. என எல்லோரின் பெயரின் பின்னாலும் உள்ள மோடி என்ற பின்னொட்டு குறித்து கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினா் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மறுத்ததால் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடந்த மாதம் 23-ம் தேதி தீா்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து, ராகுலுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டதை தொடா்ந்து ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த 3-ம் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்தது.
அதன்படி அன்று நடந்த விசாரணையில், இருதரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களையும் முன்வைத்தனா். தொடா்ந்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி.மோகேரா, இந்த மனு மீதான தீர்ப்பை 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அதன்போில் அந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணை முடிவில் தான் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை வருமா என தெரிய வரும். அப்படி தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்தும் நிறுத்தப்படும், அவர் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.