இந்தியா

புதுச்சேரி: "தினமும் 1 கோடிக்கு சூதாட்டம்... ஆளுநர் தமிழிசை ஆதரவு" காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் பாஜக மற்றும் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துணையோடு சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் மக்களவை உறுப்பினரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தின் நகரின் மையப்பகுதியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இணைந்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்துவதாகவும், நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் சூதாட்டத்திற்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  ஆதரவு தருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநருக்கு தெரியாமல் எப்படி சூதாட்டம் நடைபெறும் என கேள்வி எழுப்பிய வைத்தியலிங்கம், ஆளுநர் தனக்கு தேவையான ஒருவருக்கு சூதாட்ட கிளப் நடந்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கியுள்ளார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர். 

சூதாட்டத்தினால் ஏனாம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உடனடியாக அரசு சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோதமாக நடைபெறும் சூதாட்டம் குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறினார். மேலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிறைவேற்றாத திட்டங்களை கூறி, பொய் சொல்வதில் பிரதமர் மோடிக்கு தங்கைபோல் செயல்படுவதாக வைத்தியலிங்கம் விமர்சித்தார்.