இந்தியா

மேலவை எம்.பி. பதவியை யாருக்கு ஒதுக்குவது..? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனை...

மேலவை எம்.பி. பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரவில் அவசர ஆலோசனை நடத்தினார்.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி நாடாளுமன்ற மேலவை எம்.பி.யின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலவை எம்.பி. பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் மேலவை எம்.பி. பதவியை தேர்வு செய்வது தொடர்பாக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி திடீரென அவசர ஆலோசனை மேற்கொண்டார். தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், லட்சுமிகாந்தன், தட்சிணாமூர்த்தி, ரமேஷ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயபால், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நேரு, பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேலவை எம்.பி. பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ரங்கசாமி கருத்து கேட்டதாக தெரிகிறது. 
கூட்டம் முடிந்து வெளியே வந்த அவரிடம் மேலவை எம்.பி. பதவி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதில் எதுவும் கூறாமல், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.