மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது.
மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து 7ம் நாள் அமர்வாக மக்களவை கூடியபோது சபாநாயகர் ஓம்பிர்லாவை முற்றுகையிட்டு பதாகைகளுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய 2 நிமிடங்களிலேயே 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட நிலையில், டி.எம்.சி எம்.பி., டெரிக் ஓ பிரையன், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மேசையைத் தட்டி வாக்குவாதம் செய்தார். இதையடுத்து ஆவேசத்துடன் பேசிய அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர், நாள்தோறும் நாடக பாணியில் டெரிக் ஓ பிரையன் பேசி வருவதாகக் கூறி நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க : NLC விவகாரம் : மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்..!
மீண்டும் 12 மணிக்கு மக்களவை கூடியபோது, அவையை நடத்திய ராஜேந்திர அகர்வாலை சூழ்ந்து கொண்டு கூட்டாக முழக்கங்கள் எழுப்பியும் பதாகைகளை வைத்து மறைத்தும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அமளிக்கு மத்தியிலும் சுரங்கங்கள் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய நர்சிங் ஆணைய மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், டெல்லி அவசர சட்ட மசோதா நிறைவேற்றம் தொடர்பான விவாதம், 31ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில் எதிர்கட்சிகளின் கடும் அமளி தொடர்ந்ததை அடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரு நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து இரு அவைகளும் 31ம் தேதி கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.