மறைந்த பாடகி வாணி ஜெயராம், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
பத்ம விருதுகள்:
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் பல்துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன், 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
குடியரசு தலைவர்:
இந்நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனைவருக்கும் பத்ம விருதுகளை வழங்கினார்.
பத்ம ஸ்ரீ:
இதில், மறைந்த திரைப்பட பாடகி வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். இதேபோல், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாடு’ பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சமூக சேவகர் ‘பாலம்’ கல்யாண சுந்தரம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
பத்ம பூஷன்:
இதேபோல், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை முலாயம் சிங்கின் மகனும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். இந்தி நடிகை ரவினா டான்டன் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
கலந்து கொண்டோர்:
சமூக சேவகி ஹிராபாய் லோபிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை... காரணம் என்ன?!!