புதுச்சேரி மாநில ஆற்றில் மீன்பிடி தொழில் புரிவோர் கூட்டமைப்பினர் சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து, சுற்றுலா படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டுமென மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், " அரியாங்குப்பம் ஆற்றை நம்பி 10 ஊர்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழில் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். ஏற்கனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், மண் புழுக்கள் எடுப்பதாலும், மீன்வளம் மிக குறைந்த நிலையிலும், வேறு தொழில் செய்ய முடியாத காரணத்தால் இத்தொழிலையே நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் தற்போது சுற்றுலா என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட படகுகள் உரிய அனுமதியின்றி ஆற்றில் இயக்கப்படுகின்றது. இதனால் மீன் பெருக்கம் முழுவதும் அழிந்து ஆற்றில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் "முன்னோர் காலம் தொட்டு சுண்ணாம்பாறு, அரியாங்குப்பம் ஆறு ஆகிய இரண்டு ஆற்றையும் நம்பி இருந்தோம். ஆனால், இன்று சுண்ணாம்பாறு சுற்றுலாத்துறைக்காக அரசு மூலம் சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதால் எங்களால் அங்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அரியாங்குப்பம் ஆற்றை நம்பியே மீன்பிடி தொழில் செய்கின்றோம். ஆற்றின் தன்மை ஆழமின்றியும், அகலமின்றியும் இருப்பதால் கடல் மூலம் ஆற்றில் வரும் மீன்கள் அனைத்து வந்த வேகத்திலேயே கடலுக்கு சென்று அடைகின்றது. மேலும், சுற்றுலா படகுகள் வேகமாக இயக்கப்படுவதால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. மீன்பிடி தொழில் பாதிப்பு காரணமாக தங்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வியும் பாதிக்கப்படுகின்றது" எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் " அரியாங்குப்பம் ஆற்றை நம்பி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், மீன்பிடி தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கும் நடவடிக்கையாக சுற்றுலா படகு இயக்கத்தை நிறுத்தி பாரம்பரிய மீன்பிடி தொழிலையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்" மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் மனுவை பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதை நிறுத்தி முடியாது. ஆனால், மீன்பிடி தொழிலுக்கு பதிப்பு இல்லாத வகையில் நேரம் மாற்றி படகுகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு சிறிது காலஅவகாசம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || காவடி எடுத்து நடனமாடிய பாஜக தலைவர் அண்ணாமலை!!