இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி - 2ம் நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

Tamil Selvi Selvakumar

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், 17 அமர்வுகளில் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளானது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன.

இந்நிலையில் மக்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். மீண்டும் 12 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், அவைத் தலைவர் ராஜேந்திர அகர்வாலை பதாகைகளுடன் எதிர்கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் 24ம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்களை பேச விடாமல், பதாகைகளை ஏந்தி எதிர்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 2.30 மணிக்கு மாநிலங்களவை கூடிய நிலையில், அமளி தொடர்ந்ததால் 24 ஆம் தேதி திங்கட்கிழமை வரை அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார். மணிப்பூர் விவகாரத்தால் இரண்டாவது நாளாக அவை  நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.