இந்தியா

மாஸ்க் அணியாமல் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒலிம்பிக் வீரர்... உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Malaimurasu Seithigal TV

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவர், ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். அரசியல் தலைவர்கள் பலர் அவரை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் அரியானா மாநிலம் பானிபட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, நீரஜ் சோப்ராவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார். தற்போது அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடுமையான காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவர், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்க வசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர். தற்போது நீரஜ் சோப்ராவுக்கு உடல்நலகுறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.