இந்தியா

”மாயை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் நிதிஷ்...” விமர்சித்த அரசியல் விமர்சகர் கிஷோர்!!

17 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், பாஜக ஆதரவுடன் 14 ஆண்டுகள் பதவி வகித்ததை சுட்டிக்காட்டியுள்ளார் அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர். நீங்கள் எப்போதும் இரு வழிகளையும் கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

பீகார் அரசியலில் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே பாஜகவுடன் தொடர்பில் இருப்பது யார் என்ற விமர்சனம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
 
வீடியோ வெளியிட்ட பிரசாந்த்:

பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், இருவருக்கும் இடையே நிலவி வரும் மோதலில் பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பெரிய கூட்டணியை நிதீஷ் குமார் அமைப்பதில் பலர் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அதை நம்புவதற்குரியதாக இல்லை என்று கிஷோர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

பாஜகவுடன் தொடர்பு:

"எனக்குத் தெரிந்தவரை, நிதீஷ் குமார் மகாகத்பந்தனுடன் கூட்டணியில் இருந்தாலும்  பாஜகவுடனான அவரது தொடர்பை நிறுத்தவில்லை. ஐக்கிய ஜனதா தள எம்பியான மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவரது பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்பதே அதற்கான மிகப்பெரிய ஆதாரம்.” என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

"நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தால், அவருடைய எம்.பி. ஒருவர் எவ்வாறு இன்றளவும் மாநிலங்களவையில் முக்கிய பதவியை வகிக்க முடியும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜேடியு உறுப்பினர்:

அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் ஒரு காலத்தில் நிதிஷ் குமாரின் கட்சி உறுப்பினராக இருந்தார்.  ஆனால் "கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக" 2020 இல் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலளித்த நிதிஷ்:

பிரசாந்த் கிஷோரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த நிதிஷ் குமார் ”இதற்கு நான் என்ன கூற வேண்டும். முட்டாள்தனமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விளம்பரத்துக்காக மட்டுமே இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகின்றனர். அவர் எந்த கட்சியில் பணியாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று கூறியுள்ளார்.  

மாயை நோயினால்...:

நிதிஷின் தாக்குதலுக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர் "அவர் தனது வயது மூப்பினால் பாதிக்கப்பட்டு மாயை நோயுக்கு ஆளாகியுள்ளார். அவர் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தன்னை நம்பாத மக்களால் சூழப்பட்டுள்ளார்.  இந்த பதட்டத்தின் காரணமாகவே அவர் பேசும் போது அர்த்தத்தைத் தவிர்த்து பேசுகிறார்,"  கிஷோர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்