தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் இருந்து 28 அடி உயரம், 21 அடி அகலம் மற்றும் 25 டன் எடை கொண்ட நடராஜர் சிலை லாரி மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே ஜி20 மாநாட்டின் அரங்கின் அருகே பிரமாண்டமாக நடராஜர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சிலை என்பது சுவாமிமலையில் செய்யப்பட்டுள்ளது. 8 பொருட்களின் கலவையில் வெண்கல சிலை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்டவற்றின் கலவையுடன் கலைநுட்பத்துடன் இந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை மொத்தம் 28 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் இந்த சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது. நடராஜர் நடனம் ஆடுவதை குறிக்கும் தமிழ் கலாசாரம் நிறைந்த இந்த சிலையை ஜி20 மாநாட்டில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பமாகும். இதையடுத்து தான் அந்த சிலை சோழர் கால நடராஜர் சிலை போல் வெண்கலத்தில் கலைநயமிக்க தமிழ்நாட்டு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.
இந்த சிலையை சுவாமிமலையை சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் வடிவமைத்துள்ளனர். அதாவது அவரது மகன்களான ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிலை வடிவமைப்பு பணியில் சதாசிவம், கவுரிசங்கர், சந்தோஷ் குமார், ராகவன் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர். ஜி20 உச்சி மாநாட்டுக்கான 28 அடி உயர நடராஜர் சிலையை உருவாக்கி உள்ளனர். அதாவது சிலை 22 அடி உயரத்திலும், பீடம் 6 அடி என 28 அடியில் காட்சியளிக்கும்.
இன்று இந்த சிலை என்பது வாகனத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை என்பது ஜி20 மாநாடு நடைபெற உள்ள டெல்லியின் பிரகதி மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இதுபற்றி ஸ்ரீகண்டஸ்தபதி கூறுகையில்,...
‛‛இன்று நடராஜர் சிலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்னும் பாலிஷ் செய்யப்படவில்லை. சிலையில் இறுதிக்கட்ட பணி மற்றும் பாலிஷ் செய்யும் பணி என்பது டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த சிலை என்பது சிதம்பரம் கோனரிராஜபுரம் மற்றும் பிற சோழர் கால நடராஜர் சிலைகளின் மாடல்களை வைத்து வடிவமைத்துள்ளோம்.
இது சோழர் கால நடைமுறையான டைம்-டெஸ்ட் முறையில் உருவாக்கி உள்ளது. அதன்படி முதலில் மெழுகு பயன்படுத்தி மாதிரி சிலையை உருவாக்குவோம். அதன்பிறகு களிமண் பூசப்பட்டு உலர வைத்த பிறகு மெழுகு மூலம் சூடுபடுத்தப்படும். அதன்பிறகு வெண்கலம் பூசப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைத்து கொடுக்க மத்திய காலச்சார துறை அமைச்சகத்திடம் இரந்து கடந்த 2023 பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஆர்டர் வந்தது. இந்த பணியை முடிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த பணியை எங்களால் முன்கூட்டியே முடித்திருக்க முடியும். ஆனால் மழை பெய்ததால் பணியில் தாமதம் ஏற்பட்டது'' என்றார்.
இன்று புறப்பட்ட நடராஜர் சிலை உளுந்தூர்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கர்நாடகாவை சென்றடைய உள்ளது. அதன்பிறகு ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, கர்னூல், அடிலாபாத், நாக்பூர், சியோனி, சாகர், லலித்பூர், குவாலியர் மற்றும் ஆக்ரா வழியாக டெல்லி சென்றடைய உள்ளது.