இந்தியா

மகாராஷ்டிரா மற்றும் கோவா சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி!

Malaimurasu Seithigal TV

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு செல்கிறார். பிற்பகல் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். பிறகு ஷீரடியில் கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

இதனையடுத்து ஷீரடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதனையடுத்து மாலையில் கோவா சென்றடையும் பிரதமர், அங்கு மார்கோவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில்  நாடு முழுவதிலுமிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்,  28 மைதானங்களில் 43 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்று போட்டியிடவுள்ளனர்.