இந்தியா

"உலகின் பழமையான மொழி தமிழ்... அதை விட பெரிய பெருமை வேறென்ன"; பாரிசில் பிரதமர் மோடி புகழாரம்!

Malaimurasu Seithigal TV

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை விட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும் என, பாரிசில் உரையாற்றிய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில், இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் எலிசபெத் போர்ன், விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு இந்திய சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்றைய தேசிய தினத்தைக் கொண்டாடும் பிரான்ஸ் மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தன்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 21 ஆம் நூற்றாண்டின் பல சவால்களை இந்தியாவும் பிரான்சும் சமாளித்து வருவதாக பேசிய  பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை விட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும் எனவும் புகழாரம் சூட்டியுள்ளர்.