சனாதனத்தை விமர்சித்த உதயநிதிக்கு தக்க ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, டெங்கு-மலேரியா போலவே, சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று எனக் கூறிஇருந்தார். இதற்கு மத்திய அமைச்சர்களான அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து உதயநிதி மீது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சனாதனத்தை விமர்சித்த உதயநிதிக்கு தக்க ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த மதத்தையும் தவறாக பேசக் கூடாது எனக்கூறி சனாதன தர்மம் குறித்து யாராவது தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய அரசியலில் திமுக கவனம் பெறும் வேளையில் பிரதமர் மோடியும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.