மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியான தண்ணீரால் சிவபுரி, சியோபூர் மற்றும் தட்டியா ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களை மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருவதால் அம்மாநில அரசு ராணுவத்தை அழைத்துள்ளது. இதனிடையே மீட்பு பணிகள் தொடர்பாக, மத்திய பிரதேச முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.
அம்மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். அம்மாநிலத்தின் முக்கிய அணையான மடிகேடா அணையின் 10 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரண்டு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் சிவபுரி, சியோபூர்,குணா ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.