இந்தியா

மக்களவைத் தேர்தல்: 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு...!

Malaimurasu Seithigal TV

தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலுக்கான  தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றார். 

மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் இருப்பதால்  90 தொகுதிகளைக் கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக அதாவது நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி 13, 21ம் தேதிகளில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்படும் எனவும் 20, 30ம் தேதிகளில் வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

230 தொகுதிகள் கொண்ட மத்தியப்பிரதேசத்தில்  நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார். 21ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் எனவும் 30ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதி, 200 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் 30ம் தேதி முதல் செய்யலாம் எனவும் நவம்பர் 6ம் தேதி வேட்புமனுத்தாக்கலுக்கான கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 10ம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் 16 கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் இம்முறை 60 லட்சம் புதிய வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.