இந்தியா

இன்ஃப்ளூயன்ஸா தொற்று: அனைத்து மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம்...!

Tamil Selvi Selvakumar

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸ் பரவலை அடுத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், வைரஸ் பாதிப்பு அதிகம் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சில மாநிலங்களில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளை அணுகவும், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயது மூத்தோர்களை இந்த பருவ காலத்தில் முறையாக கண்காணிக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.