இந்தியா

கர்நாடகாவில் பாஜகவின் உத்தரவுகளை திருத்துவோம்...! திரும்பப் பெறுவோம்...! - பிரியங்க் கார்கே.

Malaimurasu Seithigal TV

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை திருத்தவோ, திரும்பப் பெறவோ வாய்ப்புள்ளது என்று அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் மல்லியார்ஜுன் கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ஹிஜாப் தடை தொடர்பாக புதிய உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது என கூறினார். மேலும், மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும்  தெரிவித்தார். 

மாநிலத்தில் பி.எஃப்.ஐ மற்றும் பஜ்ரங்தள் மீதான தடை குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டை அடுத்து ஆர்.எஸ்.எஸ் பற்றி கேட்டதற்கு, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “அதிருப்தி மற்றும் நல்லிணக்கத்தின் விதைகளை விதைக்கப் போகும் எந்த  அமைப்பையும், அதாவது: மத அமைப்போ,  அரசியல் அமைப்போ அல்லது சமூக அமைப்போ ; எதுவாயினும் அதனை  கர்நாடகாவில் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து,  பஜ்ரங்தள், பி.எஃப்.ஐ அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும், சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் அவர்களைச் சமாளிப்போம் என்றும், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய தயங்க மாட்டோம். " என்றும்  கூறினார்.