இந்தியா

மாநிலங்களவை தேர்தல் தொடங்கியதையடுத்து முக்கிய தலைவர்கள் வாக்களிப்பு...!

நாடு முழுவதும் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.

Tamil Selvi Selvakumar

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. இதில் அம்மாநிலங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்தத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற நிலையுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தனது ஆதரவாளர்களுடன் விதான் சவுதா-வுக்கு வருகை தந்தார். முன்னாதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா பகிரங்கமாக கேட்டுக் கொண்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநிலங்களவை தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் மாநிலங்களவை தேர்தலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது வாக்கினை பதிவு செய்தார். அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது வாக்கினை செலுத்தினார்.