இந்தியா

சட்டங்கள் எளிமையான முறையில் இயற்றப்பட வேண்டும்...! பிரதமர் மோடி...!!

Malaimurasu Seithigal TV

சட்டங்கள் எளிமையான முறையில் இயற்றப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அசாமில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றுள்ளார். அவரை, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா வரவேற்றார். பின்னர், முதல் நிகழ்ச்சியாக கவுகாத்தியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் சமூக உள்கட்டமைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், இதனால் ஒருசிலர் கலக்கம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இதன் பின்னர் 3 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சட்டங்கள் எளிமையான முறையில் இயற்றப்பட வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் கின்னஸ் உலக சாதனைக்காக சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் மற்றும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட பிஹூ நடனத்தை பார்வையிட்டார். அப்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வலம் வந்து அனைவரையும் பார்த்து கையசைத்தார்.

இதன் பின்னர், சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியையும் கண்டுகளித்தார். இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.