இந்தியா

மணிப்பூர்: பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்... குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு!!

Malaimurasu Seithigal TV

மணிப்பூரில் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, சமீபத்தில் பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கலவரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் பாஜக தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் டோங்மங் ஹவோகிப், பாஜகவுடனான உறவை முறித்து கொள்வதாக ஆளுநர்  அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில், கடந்த மூன்று மாதங்களாக வடகிழக்கு மாநிலத்தை பாதித்த மணிப்பூரில் இனக்கலவரத்தில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்போதைய மோதலைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது பயனற்றது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.