வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மாண்டஸ் புயல், வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல்:
மாண்டஸ் புயலானது காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு மேற்கு - வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வரும் நிலையில் வட தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வட தமிழகம், டெல்டா பகுதி என 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதனை தொடர்ந்து மழைப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: பாஜகவின் கோட்டையை மீண்டும் தாமரையே அலங்கரிக்குமா? தொடர் முன்னிலையால் பரபரக்கும் அரசியல் களம்...!
2 - ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:
அதனைதொடர்ந்து எண்ணூர், நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
புயலாகவே கரையை கடக்கும்:
இந்நிலையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மாண்டஸ் புயலானது, வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.