இந்தியா

”இது அதுபோன்ற காரியம் அல்ல....” சுற்றுசூழல் ஆர்வலருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!!!

Malaimurasu Seithigal TV

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தன்னை குடியரசுத் தலைவராக நியமிக்கக் கோரி மனு தாக்கல் செய்த சுற்றுசூழல் ஆர்வலர்.

குற்றச்சாட்டு:

மனுதாரர் அவரது மனுவில், சமீபத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தான் அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கோரிக்கை:

மனு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் முன் பேசிய சுற்றுசூழல் ஆர்வலர், "தயவுசெய்து இரண்டு நிமிடங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்.  சமீபத்திய உதாரணங்களான இலங்கையை பாருங்கள்.  அங்கு மக்கள் அதிபர் இல்லத்தில் நுழைந்தனர்.  ரஷ்யாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது.  விஷயங்கள் குழப்பமாக இருக்கின்றன.   உலகம் முழுவதும் நான் பணியாற்றுவேன்.  நாட்டில் குடியரசு தலைவருக்கான பங்கு மறுவரையறை செய்யப்பட வேண்டும்," என்று மனுதாரர் கூறியுள்ளார்.

நீதிபதிகள் கண்டனம்:

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை மோசமானதாகவும், நீதிமன்றத்தின் செயல்முறையை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

மேலும், "இது என்ன வகையான மனு? இது எவ்வாறு சட்டப்பிரிவு 32 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டது" என்று அமர்வு  கேள்வியெழுப்பியது.

"நீங்கள் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தால், உங்கள் சிறப்பு அறிவைக் கொண்டு உரைகள் ஆற்றலாம். ஆனால் இது அதுபோன்ற காரியம் அல்ல" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

"மனு அற்பமானது. இது போன்ற மனுக்கள் நீதிமன்றத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதாகும்.  கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுகின்றன. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்களை ஏற்க வேண்டாம் என்று பதிவுத்துறையிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                                                                                                                         -நப்பசலையார்