இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதனுடைய இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியில் விண்வெளி நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
LVM3-M2/OneWeb India-1 பணியின் கீழ் 26 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு, பேசிய இஸ்ரோ தலைவர், ” இந்தியாவின் இரண்டாவது ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நாங்கள் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்திவிட்டோம். தற்போது நிலத்தை உறுதி செய்யும் வகையில் எல்லை சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சோம்நாத் பேசுகையில், “ ஏவுதளத்திற்கான வடிவமைப்பு தயாராக உள்ளது. நிலம் எங்கள் கட்டுப்பாட்டில் வந்ததும், அதில் கட்டுமானத்தை துவக்குவோம்.” என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் முழு கட்டுமான நடவடிக்கைகளும் இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.