மகாராஷ்டிராவில் ஆபரேஷன் லோட்டஸ்:
மகாராஷ்டிராவில் மெகா விகாஸ் கூட்டணியிலான சிவசேனா ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாஜகவின் தூண்டுதல் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜூன் 30ம் தேதி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்.
அமைக்கப்படாத அமைச்சரவை:
முதலமைச்சராக பதவியேற்று 40 நாட்களாகியும் அமைச்சரவை அமைக்கப்படாமலே இருந்தது. நேற்று வரை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இருவரை கொண்ட அமைச்சரவையே மகாராஷ்டிராவில் இருந்தது. கடந்த வாரத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம் மட்டுமே அமைச்சர்கள் இல்லாமல் பங்கேற்ற ஒரே மாநிலம். அமைச்சரவை அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியையும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து பதவியேற்ற உடனே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் அமைச்சரவை அமைப்பது நிலுவையிலேயே இருந்தது.
ஓரங்கட்டப்படுகிறாரா முதலமைச்சர்:
அமைச்சரவையில் பெரும்பான்மை இடங்கள் முதலில் பாஜகவிற்கே ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் துணை முதலமைச்சரின் கோரிக்கையின் அடிப்படையில் 50:50 என்ற நிலையில் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் 9 அமைச்சர்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா குழுவில் 9 அமைச்சர்களும் என இடஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அனைத்து அமைச்சர்களும் ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
ஷிண்டே நிலை:
ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தேவேந்திர பட்னாவிஸின் 50:50 என்ற கோரிக்கை மட்டும் பாஜக தலைமை ஏற்று கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெயரளவிற்கான பதவியில் இருப்பவருக்கான கோரிக்கைக்கு தரப்படும் மரியாதை முதலமைச்சருக்கு ஏன் தரப்படவில்லை என்ற கேள்வியும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
கேள்விகுறியாகும் ஷிண்டேவின் அரசியல் எதிர்காலம்:
பாஜகவின் ஆட்சி கைப்பற்றும் திட்டம் நிறைவேறியதும் ஏக்நாத் ஷிண்டே ஓரங்கட்டப்படுகிறார் என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத ஏக்நாத் ஷிண்டே குழு எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதனால் இந்த எம்.எல்.ஏக்கள் மீண்டும் உத்தவ் தாக்கரே அணியில் இணையலாம் என்ற கருத்தும் உருவாகியுள்ளது. எம்.எல்.ஏக்களின் அதிருப்தியாலும் பாஜகவாலும் ஓரங்கட்டப்படும் ஷிண்டேவின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி அனைவரிடமும் எழும்பி வருகிறது.