இந்தியா

உலக அளவில் ஏற்றுமதி துறையில் இந்தியா 25வது இடம் - மத்திய அமைச்சர்

Malaimurasu Seithigal TV

உலக அளவில் ஏற்றுமதி துறையில் இந்தியா 25வது இடம் பெற்று வளர்ந்து வருவதாக மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளா மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மோடி காணொளி காட்சி பங்கேற்றார்.

இவ்விழாவில் மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இந்திய இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படுகிறது என்றும் உலக அளவில் ஏற்றுமதி துறையில் 25 வது இடத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒரு காலத்தில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு உற்பத்தி பொருட்களை, நாம் இறக்குமதி செய்த நிலையில் இன்று நாம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். உக்ரைன் போரால் உலகளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில், இந்தியாவில் பொருளாதார சீர்குலைவு ஏற்படாமல் பிரதமர் மோடியின் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.