டெல்லியில் நடந்த இரண்டு நாள் ஜி 20 மாநாடு நிறைவடைந்தது ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசிலுக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஜி20 கூட்டமைப்புகளின் 18 வது மாநாடு, டெல்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ், வங்கதேசப் பிரதமர் ஷீக் ஹசீனா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி20 நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்ட நிலையில், அனைத்து நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. உக்ரைன் குறித்த மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடுகளை ஜி20 ஒப்புக் கொள்வது, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்திற்கு வலியுறுத்தல், போர் சூழலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத்தலைவர் அளித்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்றனர். அப்போது ஷேக் ஹசீனாவுடன் ஜோபைடனும், பிரதமர் மோடியுடன் ஜார்ஜியாவும் செல்ஃபி எடுத்துக் கொண்டது உள்ளிட்ட பல்வேறு ருசிகர நிகழ்வுகள் அரங்கேறின.
முன்னதாக நேற்றைய நிகழ்வுகளுக்கு முன்னதாக ஜி20 உலகத் தலைவர்கள் கூட்டாக டெல்லி ராஜ்கட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து ஒரே எதிர்காலம் என்ற பெயரில் ஜி20 உச்சிமாநாட்டின் இறுதி அமர்வானது தொடங்கி நடைபெற்றது. இறுதி நிகழ்வாக பிரேசில் அதிபர் லியூஸ் இனாசியோவிடம் சுத்தியல் அதிகாரத்தை வழங்கி ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியப் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
இந்தியாவிடம் இருந்த ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசிலுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஜி20 மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2 நாட்களாக உலகத்தலைவர்கள் வழங்கிய அனைத்து முன்மொழிவுகள், ஆலோசனைகளை மதிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நவம்பரில் ஆன்லைன் வாயிலாக மீண்டும் ஒருமுறை கூடி, முடிவுகளின் முன்னேற்றத்தை பரிசீலிப்போம் எனவும் இதனுடன் ஜி20 மாநாட்டை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இந்தியா பெயரை புறக்கணித்து பாரத் பலகை கொண்ட இருக்கையில் உலகத்தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி அமர்ந்து பேசியதும், குடியரசுத்தலைவர் விருந்துக்கு மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாததும் ஜி20 மாநாட்டில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.