கஞ்சா சாகுபடியை சட்டப் பூர்வமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக இமாச்சல் பிரதேச முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தடை செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருளாக கஞ்சா உள்ளது. நாள்தோறும் பல்வேறு இளைஞர்கள் இப்பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். இதனால் கஞ்சா பயன்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கஞ்சா சாகுபடியை சட்டப் பூர்வமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக இமாச்சல் பிரதேச முதலமைச்சா் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், "கஞ்சா பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால், நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதை நிரூபிப்பதோடு, மாநிலத்திற்கு வருவாயை ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் "அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, உருகுவே, பெல்ஜியம், செக் குடியரசு போன்ற நாடுகளிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக மாநில அரசு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளும்" என்று அவர் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் கஞ்சா செடிகளைப் பயிரிடுவதற்கு போதைப்பொருள்கள் தடுப்பு சட்டத்தின்படி 1985ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளிடமே உள்ளது. இதனால் ஒரு மாநில அரசு அந்த மாநிலத்தில் கஞ்சா செடிகளைப் பயிரிடுவதை சட்டப் பூர்வமாக்க முடியும். ஏற்கனேவே உத்தராகண்ட் மாநிலத்தில் கஞ்சா செடி பயிரிடுவதற்கு அதிகாரபூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் தயாரிப்பதற்காக கஞ்சா பயிரிட அங்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிட த்தக்கது.