இந்தியா

”ஹிஜாப் வேண்டும்...” நீதிபதி துலியா ஆதரிக்கும் காரணம் என்ன?!!...யார் இந்த நீதிபதி துலியா?!!

Malaimurasu Seithigal TV

கர்நாடக ஹிஜாப் சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் இன்று அக்டோபர் 13, 2022 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நீதிபதிகள் துலியா மற்றும் நீதிபதி ஹமேத் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து நுழைய தடை விதித்த விவகாரத்தில் இரு நீதிபதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

நீதிபதி ஹேமந்த் குப்தா இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தடைக்கு எதிரான மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். மற்றொரு நீதிபதி சுதன்ஷு துலியாவின் அமர்வு தனது எதிர் கருத்தை தெரிவித்தது. தடைக்கு உடன்படாத நீதிபதி சுதன்ஷு துலியாவின் வாதங்கள் என்ன என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்வோம் ...

என்ன கூறுகிறார் நீதிபதி துலியா:

”எனது தீர்ப்பின் முக்கிய உந்துதல், அத்தியாவசியமான மதப் பழக்கவழக்கத்தின் முழுக் கருத்தும் இந்த சர்ச்சையில் அவசியமில்லை என்பதே.   இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறான பாதையை எடுத்துள்ளது. இது முற்றிலும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் பிரிவு 14 மற்றும் 19 க்கு உட்பட்டதே” என விளக்கமளித்துள்ளார்.

”பெண் குழந்தைகளின் கல்வி குறித்து பேசிய நீதிபதி துலியா, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் முதலில் வீட்டு வேலை செய்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். மேலும், என் மனதில் எழுந்த பெரிய கேள்வி பெண் குழந்தைகளின் கல்வி மட்டுமே. நாம் அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பாக்குகிறோமா? என்பதே அந்த கேள்வி” எனக் கூறியுள்ளார் நீதிபதி துலியா.

”பிப்ரவரி 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான உத்தரவு  அரசாணையை ரத்து செய்து தடையை நீக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று நீதிபதி துலியா தெரிவித்துள்ளார். 

யார் இந்த நீதிபதி துலியா?:

நீதியரசர் துலியா பவுரியில் வசிப்பவர். அவரது தாத்தா பைரவ் தத் துலியா ஒரு சுதந்திர போராட்ட வீரர். 1986-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். 2000ல் உத்தரகாண்ட் மாநிலம் உருவான பிறகு இங்கு வந்தார். 2004 இல், அவர் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஜனவரி 2021 இல், அவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் மே 2022 இல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 

                                                                                                   - நப்பசலையார்