இந்தியா

ஒலிம்பிக் பதக்கங்களை ஆற்றில் வீச சென்ற மல்யுத்த வீராங்கனைகள்! தடுத்து நிறுத்திய விவசாயிகள் சங்கத் தலைவர்!

Malaimurasu Seithigal TV

இந்திய மல்யுத்த வீரர்களும் வீராங்கணைகளும் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டத்தை விவசாயிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி மல்யுத்த வீராங்கணைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், சங்கீதா புனியா மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 38 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் கடந்த 27 ஆம் தேதி நாடாளுமன்ற  புதிய கட்டடம் நோக்கி பேரணி நடத்தினர். இதையடுத்து அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், நாட்டிற்காக விளையாடி வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில் பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதி ஓரத்தில்  பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் அங்கு நுற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.  அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்ட அதே நேரத்தில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

இதனிடையே, மல்யுத்த வீரர்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மல்யுத்த வீரர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க ஐந்து  நாட்கள் கால அவகாசம் கோரினார். இதனை வீரர்கள் ஏற்றுக் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த பதக்கங்களை நரேஷ் தியாகத்  சேகரித்து எடுத்துச் சென்றார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த நரேஷ் திகாயத் பாஜகவின் விவசாயிகள் சங்கமான பாரதிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.