ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 4 ஆண்டுகளாக விவசாயிகள் சிரமப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பிகானெர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டுள்ளதாகவும் ஒருவர் காலை ஒருவர் பிடித்து இழுத்து வருவதாகவும் சாடினார். ராஜஸ்தானுக்காக மத்திய அரசு தீட்டும் திட்டங்களை காங்கிரஸ் அரசு வீணடித்து வருவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். கனமழையிலும் சாலை பேரணி நடத்திய பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். சைக்கிள் பேரணிக்கு நடுவே மோடி காரில் வலம் வந்தது வைரலாகி வருகிறது.
முன்னதாக தெலங்கானா மாநிலம் வாராங்கலில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனது குடும்பத்திற்காக மட்டுமே சந்திரசேகர ராவ் உழைத்து வருவதாகவும், ஊழல் அரசாக தெலங்கானா அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மாநிலத்தில் இருண்ட ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் சாடினார். முதலமைச்சர் .சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரசின் கதையை பாஜக முடிக்கப் போகிறது என பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்தார்.