சுதந்திரம், சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தைத் தடுக்க, தீவிரவாதிகள் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக ஐநா பயங்கரவாத எதிர்ப்புக்குழுக் கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐநா பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் 2ம் நாள் மாநாடு:
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் 2ம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஐநா பயங்கரவாத எதிர்ப்புக்குழுத் தலைவரும் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான ருசிரா கம்போஜ், தொழில்நுட்பங்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைப்பதால் பயங்கரவாதம் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு:
இதைத்தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணையமும் சமூகவலைதளப் பக்கங்களும் பயங்கரவாதத்தின் கருவிகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார். வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுத விநியோகங்களுக்காக ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதக் குழுக்கள் தற்போது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகவும், சுதந்திரம், சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தைத் தடுக்க தொழில்நுட்பத்தை பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த கருவியாக உபயோகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: பசும்பொன் பயணம் ரத்து...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?
தொடர்ந்து, அரசுசாரா நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், அரசுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பயங்கரவாத அச்சுறுத்தல் விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஐநா தலைவர் ஆன்டொனியோ குட்டரெஸ் கவலை:
முன்னதாகப் பேசிய ஐநா சபைத் தலைவர் ஆன்டொனியோ குட்டரெஸ், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தவறான தகவல்களை தீவிரவாதிகள் பரப்புவதாகக் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.