இந்தியா

நாட்டை இழிவுப்படுத்தினாரா ராகுல்... பாஜக கூறுவதென்ன?!!

Malaimurasu Seithigal TV

லண்டன் கருத்தரங்கில் நாட்டின் ஜனநாயகம், நீதித்துறையை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தொடரும் அமளி:

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு  ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  லண்டனில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பாஜக நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மத்திய சட்ட அமைச்சர் கூறியதென்ன?:

யாருக்காவது கஷ்டம் என்றால், அவரைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை எனவும் ஆனால் அவர் நாட்டை இழிவுபடுத்தினால், நாட்டின் குடிமகனாக நாம் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்த கிரண் ரிஜ்ஜூ லண்டன் கருத்தரங்கில் ராகுல் காந்தி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை ஆகியவற்றை அவமதித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

பாஜக எதிர்ப்பு:

லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.  இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பெரும் விமர்சனம் எழுந்ததுடன்  இந்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வருகிறது.  

ராகுல் காந்தி கூறியதென்ன?:

சமீபத்தில் ராகுல் காந்தி லண்டன் சுற்றுப்பயணம் சென்றார்.  அப்போது லண்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள எம்.பி.க்களிடம் பேசிய அவர்,  நமது மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக்குகள் அடிக்கடி அணைக்கப்படுவதாகவும் விவாதிக்க எங்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறியிருந்தார்.  

மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தாக்கிய ராகுல் காந்தி, இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டதாகவும் பத்திரிகை, நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் அனைத்தும் ஆபத்தில் உள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.  அங்கு தொடர்ந்து பேசிய அவர் அரசாங்கம் தன்னை உளவு பார்ப்பதாகவும், சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் அரசு பொய் சொல்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.   

-நப்பசலையார்