டெல்லி ராஜ்கட்டில் போலீசாரின் தடையையும் மீறி ராகுல்காந்திக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்புடன் காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாக, 2019ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். இதனால் மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்ததாக, பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி, நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லி ராஜ்கட்டில் ஒருநாள் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னதாக கார்கே வீட்டில் ஆலோசனையை முடித்துக்கொண்டு போராட்டத்திற்கு புறப்பட்டனர்.
இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்
தொடர்ந்து ராஜ்கட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தடையையும் மீறி மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரசார் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து பேட்டியளித்த கார்கே, ராகுல்காந்தியை பாஜக பேசவிடுவதில்லை என குற்றம்சாட்டினார். தேசத்திற்காகவும், பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடும் ராகுலுக்கு ஆதரவாக சத்தியாகிரகம் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.