புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் புதுச்சேரி அரசியல் சூழல் குறித்த விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் வருமானம் பெருகியதா?
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்திய நாட்டின் வருமானம் பெருகி இருப்பதாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளோம், பண வீக்கம் குறைந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தார். இன்று பணவீக்கம் அதிகரித்துள்ளது, வருமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோம் என கூறி பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். சமீப காலமாக தென் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வருகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு அனைத்து துறைகளிலும் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கோப்புகள் இந்தியில் தான் இருக்க வேண்டும் என உள்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும்
மத்திய அரசு தேர்வுகள் இந்தியில் தான் எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இது போன்ற செயல்களால் மத்திய அரசின் இந்தி திணிப்பு வெளிப்படையாக தெரிகிறது என கூறினார். நாம் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்பு என்பதை ஏற்க முடியாது என கூறிய அவர், இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்ப்பதாகவும், புதுச்சேரியில் எந்த காலத்திலும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் என்றும் போராட்டங்கள் நடத்தியாவது அதனை நிறுத்தும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் பொதுமக்களை சந்திப்பது குறித்து தான் பேசியதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை தனக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக பொதுமக்களிடம் குறை கேட்க அதிகாரம் இல்லை, அதை அவர் தவிர்க்க வேண்டும் என்று தான் கூறியதாக நாராயணசாமி பேசினார்.
துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் இல்லை என்றும், அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும்.
துணைநிலை ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதனை உள்துறை அமைச்சகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்றத்தின் உத்தரவை துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்த அவர் அதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மின் துறை ஊழியர்கள் போராட்டம்
மேலும் அரசின் கோரிக்கையை ஏற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை தீபாவளி வரை நிறுத்தி வைத்துள்ளனர், எனவே மின்துறை விவகாரத்தில் மாநில அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பிற மாநிலங்கள் மின்துறை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வரும் போது புதுச்சேரியில் அதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். உடனடியாக மின்துறை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்ட நாராயணசாமி,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை
பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரியில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேரிடர் மேலாண்மை கூட்டம் கூட கூட்டப்படவில்லை. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் தற்போது அலங்கோலமான ஆட்சி நடைபெற்று வருவதாக பேசிய அவர், தான் சொன்னது போல புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி டம்மி முதலமைச்சராக செயல்படுகிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார் என்பதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர். எனவே விரைவில் இந்த ஆட்சி தூக்கி வீசப்படும் என தெரிவித்தார்.