லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிக்கிறார் சித்திராமையா என முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிராக ''40 சதவீதம் கமிஷன் அரசு'' என ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்தங்களை பெற பசவராஜ் பொம்மைக்கு நேரடியாக 40 சதவீதம் கமிஷன் செலுத்துங்கள் என க்யூ ஆர் கோடு வடிவில் முதல்வர் படத்தை அச்சிட்டு மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா மிகக் கடுமையான விமர்சனங்களை முன்னெடுத்து தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சித்தராமையா என்னை மட்டும் ஊழல்வாதி எனக் கூறி இழிவு படுத்தாமல் என் லிங்காயத் சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பசவராஜ் பொம்மை பேசும் போது ''ஒட்டுமொத்த சமுதாயத்தை ஊழல் சமூகம் என்று கூறுவது வேதனை அளிக்கிறது. அனைவரும் வேதனையில் உள்ளனர். ஒருபுறம் பார்க்கும் போது இது காங்கிரஸின் கலாச்சாரம் என்று தெரிகிறது. ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை குறித்து அவதூறாக பேசியதை போல் தற்பொழுது சித்தராமையா லிங்காயத் சமூகத்தை தவறாக பேசியுள்ளார்'' எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள சித்திராமையா தான் முதல்வர் ஊழல் குறித்து மட்டுமே விமர்சனம் செய்து வருவதாகவும் ஆனால் லிங்காயத் வகுப்பை குறித்து எங்கும் தான் தவறாக பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ''தேர்தல் சந்தர்பத்தை பயண்படுத்தி இதை திரித்து லாபம் அடைய தவறான குற்றச்சாட்டை பாஜக முன் எடுத்து வைக்கிறது. எனக்கு லிங்காயத் சமூகம் குறித்து பெரும் மதிப்பு உள்ளது. லிங்காயத் வகுப்பில் இதற்கு முன்பு பலர் உண்மையான முதல்வர்கள் ஆக பணியாற்றி உள்ளனர். தற்பொழுது பசவராஜ் பொம்மை மட்டுமே ஊழல்வாதியாக திகழ்கிறார்'' எனக்கூறியுள்ளார்.