இந்தியா

கோவையை தொடர்ந்து கர்நாடகாவில் வெடி விபத்து...முதலமைச்சர் கொடுக்கும் விளக்கம் என்ன?

Tamil Selvi Selvakumar

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

வெடி விபத்து:

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கனகன்டி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (19.11.2022) மாலை 05.15 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆட்டோவில் பயணித்த பயணி கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்த பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பயணியும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் மங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

விபத்தில் சிக்கிய பொருள் :

வெடி விபத்து ஏற்பட்ட ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிபுணர்கள் சோதனை செய்த பிறகு தான் இந்த வெடி விபத்து குறித்து முழுமையான தகவல் கிடைக்கும் என மங்களூரு காவல்துறை ஆணையர் சசிகுமார் தெரிவித்திருந்தார். 

கர்நாடக டிஜிபி தகவல் :

இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் இந்த  சம்பவம் விபத்தாக நடைபெறவில்லை மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதம் தாக்குதல் எனவும் இந்த கும்பல் பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விட திட்டம் தீட்டி உள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை - மங்களூரு வெடி விபத்து தொடர்பு :

குறிப்பாக இந்த குக்கர் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்ற ஆட்டோவில் பயணம் செய்த ஒரு நபர் கோயம்புத்தூரில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், அந்த தகவலின் அடிப்படையில் கர்நாடக மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடக உள்துறை அமைச்சர் :

இந்த விபத்து குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பல தகவல்களின்படி இதன் பின்னணி மிகப் பெரியதாக உள்ளது. தீவிரவாத அமைப்புகளுடன் இந்த நபர் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது எனவும் மத்திய விசாரணை அதிகாரிகளும் இந்த விசாரணையில் ஈடுபட இருப்பதாகவும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டும் சேர்ந்து விசாரணையை துரிதமாக நடத்தி வருகிறது என்றும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முழு தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சோதனை தீவிரம் :

மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் தொடர் வாகன தணிக்கை சோதனையை மேற்கொண்டும் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் விளக்கம்:

இந்நிலையில், இந்த ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல் கட்ட விசாரணையில் இது எல்இடி வகை வெடிகுண்டு எனவும், சந்தேகப்படும் நபர் வைத்திருந்த ஆதார் எண் போலியானது எனவும் குறிப்பிட்ட அவர்,  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார் . தொடர்ந்து பேசிய அவர், வெடிகுண்டு எடுத்து வந்தவர் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாகவும்,  பல தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.