இந்தியா

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் அரசு பள்ளியை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

டெல்லியை போன்று தமிழகத்திலும் நவீன மாடல் பள்ளிகளை உருவாக்கப் போவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

பின்னர், கெஜ்ரிவாலுடன் சேர்ந்து நவீன வசதிகளுடன் கூடிய டெல்லி அரசு பள்ளிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் Business Blasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்த முதலமைச்சர், மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின்போது, டெல்லியில் அரசு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் விளக்கம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி அரசு பள்ளிகளை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போவதாக தெரிவித்தார். மேலும், எல்லா துறைகளையும் போல் தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இதனிடையே, டெல்லியில் உள்ள மொஹல்லா இலவச கிளினிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலினுக்கு விளக்கினார்.