இந்தியா

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு எழுதிய கடிதமும்....கிடைக்காத பதிலும்...

Malaimurasu Seithigal TV

உத்திர பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆதரவையும் பங்கேற்பையும் கோரி மத்திய அரசு கடந்த மாதம் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என மத்திய அரசு குற்றச்சாட்டு.

காசி தமிழ் சங்கமம்:

”ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதை பிரதமர் மோடி நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

உறவு புதுப்பிப்பு:

மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ்ச் சங்கமானது, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் காசி  இடையே உள்ள வரலாற்று தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பதில் கிடைக்காத கடிதமும் விமர்சனமும்:

தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆதரவையும் பங்கேற்பையும் கோரி மத்திய அரசு கடந்த மாதம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.  ஆனால் இதுவரை அதற்கான பதில் கடிதம் கிடைக்கவில்லை என மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாரணாசியில் ஒரு மாதமாக நடைபெறவுள்ள காசி தமிழ்ச் சங்கத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவில்லை எனவும்  மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில்:

தமிழ்நாடு அரசையோ தமிழறிஞர்களையோ மத்திய அரசு கலந்தாலோசிக்கவோ, அழைக்கவோ இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் விமர்சித்திருந்த நிலையில் இது போன்ற கடிதம் தங்களுக்கு வரவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்